தமிழ்நாடும் 'பந்த்'களும்
காவேரி நதிநீர் பிரச்சனை தொடர்பான தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்தும் சேலம் கோட்டம் அமைவதை கேரள அரசு எதிர்ப்பதை கண்டித்தும் மார்ச் 29-ம் தேதி வியாழனன்று ஈரோடு மாவட்டத்தில் முழு அடைப்பிற்கு மாவட்ட விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந்ததற்கு அனைத்து வணிகர்கள் சங்கங்களும் ஆதரவு கொடுக்க அன்றைய தினம் ஈரோடு மாவட்டம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான 'பந்த்'தை ரசித்து அனுசரித்தது. பல கோடி ரூபாய் வர்த்தக இழப்புகளையெல்லாம் மறந்து உறங்கிப்போன ஈரோடு மாவட்ட மக்கள் காலை எழுந்ததும் அனைத்து தினசரி நாளிதழ்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளின் தலைப்புச்செய்திகளை பார்த்து முந்தைய தினம் மாவட்டம் ஸ்தம்பித்ததை விட அதிகம் ஸ்தம்பித்தனர். அதற்குக் காரணம், முந்தைய தினம் பிற்ப்படுத்தப்பட்டோருக்கான இருபத்தியேழு சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைத் தொடர்ந்து தமிழக முதல்வர் தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி 31-ம் தேதி - சனிக்கிழமை - உச்ச நீதி மன்றத்தின் இடைக்கால தடையை கண்டித்து தமிழகம் முழுவதும் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்த செய்திதான்.
31 - ம் தேதி தமிழகம் ஸ்தம்பித்தது.
ஏற்கனவே பல பிரச்சினைகளை சுமந்துகொண்டிருக்கும் தமிழகம் இப்பொழுது இன்னொன்றையும் சுமக்க ஆரம்பித்துள்ளது. இந்த பிரச்சனைகளில் எது முதலில் இறக்கிவைக்கப்படும், எப்பொழுது இறக்கிவைக்கப்படும் என்ற யோசனையில் 'பந்த்' அனுசரித்து களைத்துப்போன தமிழகம் அடுத்த நாளான முட்டாள்களின் தினமான ஏப்ரல்-1 உதயத்தை எதிர்பார்த்து உறங்கிப்போனது.
No comments:
Post a Comment